கரூர் மாவட்டம் வாங்கப்பாளையம் தங்கநகரில் கழிவுநீர், மழைநீர் செல்ல முடியாமல் சாலையிலேயே தேங்குவதால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் கழிவுநீர் செல்வதற்காக கடந்த மாதம் பாலம் அமைக்கும் பணி தொடங்கி முடிவடையும் நிலையில், பாதையில் உள்ள மணல் அகற்றப்படாமல் குன்று போல் இருந்தது. இதனால் இந்த பாதையை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலப்பணிகளை விரைந்து முடித்து, தார்சாலை அமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.