புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தஞ்சை மாவட்டத்தையொட்டிய பகுதி என்பதால் அவசர சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. 108 ஆம்புலன்சில் வருவோருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூட டாக்டர்கள் இல்லாததால் உயிர் இழப்புகள் தொடர்ந்து வருகின்றன. மேலும் மருத்துவமனையில் உள்ள பல மருத்துவ உபகரணங்கள் உரிய பணியாளர்கள் இல்லாததால் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. எனவே கறம்பக்குடி மருத்துவமனைக்கு இரவு பணி டாக்டர் மற்றும் கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.