திருச்சி மாவட்டத்தில் உள்ளது மண்ணச்சநல்லூர் வட்டம். இதன் கீழ் சுமார் 50 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதற்காக தமிழக அரசின் சார்பில் மண்ணச்சநல்லூர்-துறையூர் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினம்தோறும் பொதுமக்கள் அரசின் திட்டங்களை பெறுவதற்காகவும், தெரிந்து கொள்வதற்காகவும் வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் சுற்றுப்புற சுவர் ஆகிய இடங்களில் கண்ணீர் அஞ்சலி, விளம்பர சுவரொட்டிகள் ஒட்டி உள்ளார்கள். இதனால் வட்டாட்சியர் அலுவலக வாயில் சுவரொட்டி ஒட்டும் இடமாக மாறி வருகிறது. வட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள் நாம் இடம் மாறி வந்து விட்டோமோ என்ற சிந்தனை அவர்களின் மனதில் தோன்றுகிறது. எனவே மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சுவரொட்டி ஒட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.