அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கிழக்குப் பகுதியில் இருந்து பெரிய ஓடை வழியாக மழைநீர் வருகிறது. இந்த ஓடையை சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் தூர் வாரி சீரமைத்த நிலையில், மீண்டும் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் உள்ள வரத்து வாய்க்காலில் கருவேல மரங்கள் முளைத்து காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கறிக்கடை, ஓட்டல்களில் சேரும் கழிவுகளை வாய்க்காலில் கொட்டுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே கருவேல மரங்கள் மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.