மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன. இங்கு ஏராளமான பேர் பணிசெய்கிறார்கள். இரவு நேரங்களில் இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் உள்ள சாலைகளின் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. சாலைகளின் தரமும் மோசமாக உள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெரியோர், பெண்கள் மேடு,பள்ளம் தெரியாமல் கீழே தடுமாறி விழும்நிலை ஏற்படுகிறது. எனவே இதுதொடர்பான அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் சின்னம்மாபேட்டையில் ஓடைக்கால்வாய் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஓடையில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாய் இன்னமும் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அந்த கால்வாயை சீரமைக்கவும், அதில் தேக்கமடைந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் ஏ.என்.குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் தகுந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை. சுற்றுசுவரும் அமைக்கப்படாததால் பள்ளிக்குள் பாம்புகள் புகும் அவலம் நிகழ்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியை சுற்றி சுவர் எழுப்பி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி மண்டலம்-1, திருவெற்றியூரில் இருந்து மணலி செல்லும் வழித்தடத்தில் ரெயில்வே பாதை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் தற்போது உடைந்து உருதெரியாமல் காணப்படுகிறது. வேகத்தடை இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வேகதடைகள் அமைத்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க துறைசார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை புழல் ஒற்றவாடை தெருவில் தெருநாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவு நேரங்களில் வேலை முடிந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பும் பெண்கள், பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் என அனைவருமே தெருநாய்களுக்கு பயந்து அச்சத்துடன் சாலையில் செல்கிறார்கள். வாகன ஓட்டிகளின் பயணம் தெருநாய்களால் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் குடியிருப்புவாசிகளின் சிரமத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் உள்ள மின்மாற்றியை சுற்றிலும் மர்ம நபர்கள் பழைய கழிவு பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. எனவே இதுசம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் மின்மாற்றியை சுற்றியுள்ள கழிவு பொருட்களை அகற்றிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை பல்லாவரம் கண்டோன்மென்ட் பூங்காவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். இங்குள்ள மின்சார பெட்டி ஒன்று திறந்தநிலையில் ஆபத்தாக உள்ளது. மேலும் பூங்காவின் படிகட்டுகள் அமைந்துள்ள இடத்தில் உள்ள மின் விளக்குகளும் சரிவர எரியவில்லை. இந்தநிலையை தவறான வழியில் இளம் தலைமுறையினர் பயன்படுத்துகிறார்கள். எனவே பூங்காவை நிர்வகிக்கும் அதிகாரிகள் மின்சார பெட்டியை சரிசெய்யவும், மின்விளக்குகள் எரிய செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை, அயனாவரம், 97-வது வட்டம் ஏழுமலை தெருவில் விதிகளைமீறி இருசக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், தேவையில்லா சண்டைகளும் நிகழ்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அடையாறு சர்தார்பட்டேல் சாலையில் தொடர்ச்சியாக 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் எண் 49, 49-எப் ,78 மற்றும் 47 ,47-ஏ ,47-டி, போன்ற பஸ்கள் வந்து செல்கின்றன. நிழற்குடை இல்லாமல் செயல்படும் இந்த பஸ்நிறுத்தத்தால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் என அனைவரும் வெயிலும், மழையிலும் நின்று சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் எண்கள் குறித்த அறிவிப்பு பலகையும், நிழற்குடையும் உடனடியாக அமைக்க வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டம், கிழக்கு ராஜ வீதியில் உள்ள மச்சேச பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தமானது. பக்தர்கள் பலர் சாமி தரிசிக்க வரும்நிலையில், கோயிலின் அருகே குப்பைகள் மேடு போல காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பக்தர்கள் மூக்கை கைக்குட்டையால் மூடி செல்லும் அளவிற்கு மோசமாக உள்ளது. எனவே குப்பைகள் அகற்ற உடனடி நடவடிக்கையை இதுதொடர்பான அதிகாரிகள் எடுக்க வேண்டும்.